Sunday 27 January 2013

ஹார்ன் பில் பறவை ( Horn Bill Bird)

“ஹார்ன் பில்” எனும் பறவை இனம் மேற்குதொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன. மிகவும் கவர்ச்சியான பறவையென கூறப்படும் இப்பறவை பார்ப்பதற்கு சற்றே பெரிதாகவும், பறந்து செல்லும் போது ஒரு ஹெலிகாப்ட்டர் பறப்பதைப் போலவும் தோன்றும். இறக்கைகளை அசைக்கும் ஓசை சிறிய மோட்டரின் சத்தத்தை போலிருக்கும்.  இதனாலேயே  ஹார்ன் பில் (Horn Bill) என வைத்திருப்பார்கள் போலும். இதற்கு இரண்டு வாய்கள் இருப்பதை போல தோற்றமளிக்கும். இதன் அலகுகளும், சிறகுகளும் மிகவும் சிறப்புடையவை.
 

 


 
கவர்ச்சியான வர்ண அமைப்பும் பிரம்மாண்ட உடலழகும் அனைவரையும் கவரச் செய்கிறது. இவை அடர் மஞ்சள் நிறம் அல்லது கறுப்பு நிறத்தில் காணப்படும். இந்த “ஹார்ன் பில்” பறவை ஆப்பிரிக்க பழங்குடியினரின் ஆண்மைக்கும், வீரத்திற்கும் அடையாளமாக கருதப்படுகிறதாம்.
இவை புழு, பூச்சிகளையும், பழங்களில் குறிப்பாக அத்திப்பழங்கள் மற்றும் கொட்டைகளை உணவாக உட்கொள்கின்றன. இதன் எடை சுமார் 2.5 கிலோ என்கின்றனர். இவைகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் என கூறுகின்றனர்.  இவை இணையுடன் சேர்ந்து வாழக்கூடியவை. பெண் பறவைகள் பல ஆண் பறவைகளுடன் இணை சேராமல் ஒரே ஆணுடன் மட்டுமே வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் என்பது சிறப்பாக குறிப்பிடத்தக்கது.
 
 
இனப்பெருக்க காலங்களில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேடும். ஆனால் பெண் பறவையே கூட்டினை தேர்ந்தெடுக்கும். மரப்பொந்துகளில் கூட்டினை அமைத்துக்கொள்ளும். தாய்ப் பறவையானது மரப்பொந்துக்குள் புகுந்து ஆற்று படுகைகளில் இருந்து சேகரித்த களிமண்ணைக் கொண்டு கூட்டை உட்புறமாக கட்டும், கட்டி முடித்ததும் 2 சிறுதுளைகளை மட்டும் விட்டுவிட்டு கூட்டினை முழுவதுமாக அடைத்துவிடும். ஒருதுளையினை ஆண்பறவை உணவுகொண்டுவந்து தருவதற்கும், இரண்டாவது  துளையினை தன் கழிவை நீக்குவதற்கும் பயன்படுத்துகிறது. பெண் பறவை உள்ளே அமர்ந்து கொண்டு தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போல அமைத்துக்கொள்ளும்.
இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவையே பெண் பறவைக்கும் உணவு கொண்டுவந்து தரும். அதுவரை பெண் பறவை பொந்திலேயே இருந்து முட்டையிட்டு அடை காக்கும். இது சுமார் 2 முட்டைகள் இடும். குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவருவதற்கு கிட்டத்தட்ட ஐந்து வாரங்கள் முதல் 7 வாரங்கள் வரை எடுக்குமாம்.
 
வெளிவந்ததும் தாய்ப்பறவையானது  கூட்டினை உடைத்துக் கொண்டு வெளியே வந்து மீண்டும் ஓட்டையை அடைத்துவிடும். சிறுதுளை வழியே ஆணும் பெண்ணும் இரையை கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் தனித்து செயல்பட குறைந்தது 2 வருடங்களாவது ஆகின்றன. 5 வருடங்களுக்கு பிறகே முழுமையான வளர்ச்சியை அடைகின்றனவாம்.
 
இத்தகைய சிறப்புடைய பறவைகள் கவர்சியாக மட்டுமல்லாமல், ஆபரணப் பொருட்களுக்கும் பயன்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்க பழங்குடியினர் பறவைகளைக் கொல்லாமல் அவை உதிர்த்த இறகுகளை மட்டுமே நடனத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே அங்கு அதிகம் அழிவதில்லை.
வடகிழக்கு இந்தியாவில் சிலர் இறகிற்காக வேட்டையாடினர். ஒருசில சுற்றுசூழல் ஆர்வலர்களின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இதன் தலையை வெட்டிச் சென்று சிலைகள்,  ஆபரணங்கள் செய்வதற்கு பயன்படுத்துகின்றனர். இதற்காக அதிகளவில் கொல்லப்பட்டு வருவதால் இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>